ஹரியானா மாநிலத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பேரணியால் ஏற்பட்ட பெரும் வன்முறையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மணிப்பூர் மாநிலம் போல ஹரியானாவிலும் இணைய சேவை முடக்கப்பட்டுளது. ஹரியானாவில் கல்வி நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 3 மாதங்களாக மைத்தேயி- குக்கி இனக்குழுக்களிடையே வன்முறை தொடருகிறது. இதனால் மணிப்பூர் மாநிலத்தில் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையும் முடங்கி இருக்கிறது. இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாகவும் பல்லாயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உச்சநீதிமன்றமும் மணிப்பூரில் அமைதி திரும்பாமல் இருப்பதற்கு கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தது.
தற்போது தலைநகர் டெல்லியை ஒட்டிய ஹரியானா மாநிலமும் வன்முறை பூமியாகி இருக்கிறது. ஹரியானாவில் இந்துத்துவா அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய பேரணியால் அங்கு வன்முறை வெடித்தது. ஹரியானாவின் குருகிராம் நூ பகுதியில் இப்பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணிக்கு எதிராக ஒரு கும்பல் கல்வீசித் தாக்குதல் நடத்தியது. இதனால் மிகப் பெரும் மோதல் ஏற்பட்டது. மோதல்களைத் தடுக்க போலீசார் தடியடி நடத்தினர்; துப்பாக்கிச் சூடு நடத்தினர். இம்மோதல்களில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஹரியனா மாநிலம் நூ பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் நாளை வரை இணைய சேவை இணைப்புகள் முடக்கப்பட்டுள்ளன. அதேபோல கல்வி நிறுவனங்களையும் மூடவும் உ9த்தரவிடப்பட்டுள்ளது.
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் 3 மாதங்களாக இணையசேவை முடக்கப்பட்டிருந்தது. நீதிமன்ற தலையீட்டுக்குப் பின்னர் பகுதி அளவுதான் தற்போது இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதே போல ஹரியானாவிலும் நிலைமை ஏற்பட்டுள்ளது.