2025 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூரும் வகையில் ” நிலையான நாளையை உருவாக்குதல், அவளுடைய பலமே பாதை” என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டு மார்ச் 02 முதல் 08 வரை தேசிய மகளிர் வாரம் கொண்டாடப்படுகின்றது.
அதன் அடிப்படையில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் வார நிகழ்வுகளானது, பிரதேச செயலாளர் திரு உ. உதயஸ்ரீதர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இடம்பெற்றது.

அந்த வகையில் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப்பொருட்களை மேம்படுத்தல் மற்றும் சந்தை வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த விற்பனை கண்காட்சியானது நேற்று முன்தினம் (05) பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிறு தொழில் முயற்சியாளர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட 30 இற்கும் அதிகமான உள்ளூர் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததோடு, கலந்து கொண்டோர் பெருமளவான உற்பத்திப் பொருட்கள் கொள்வனவு செய்வதில் ஆர்வம் செலுத்தியமையை காணக்கூடியதாக இருந்தது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் உட்பட ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.








