சில காலமாக சிரியாவில் அமைதி மெல்லத் திரும்பிக் கொண்டிருந்த சூழலில், இப்போது அங்கே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
சிரியாவில் உள்ள ஆளும் தரப்புக்கும் முன்னாள் ஜனாதிபதி பஷர் அல் அசாத் ஆதரவாளர்களுக்கும் இடையே வெடித்த மோதலில் கடந்த இரண்டு நாட்களில் 1000 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய கிழக்குப் பகுதிகளில் தொடர்ச்சியாக மோதல் போக்கே நிலவி வருகிறது.
ஏற்கனவே இஸ்ரேலுக்கும் ஹமாஸ், ஹிஸ்புல்லா இடையே சில காலமாகவே மோதல் நிலவி வந்தது. இப்போது தான் இஸ்ரேலில் மெல்ல அமைதி திரும்பி வருகிறது. இதற்கிடையே இப்போது திடீரென சிரியாவில் வன்முறை வெடித்துள்ளது.
மத்திய கிழக்கில் அமைந்துள்ள சிரியாவில் கடந்த 14 ஆண்டுகளாகவே அங்கு உள்நாட்டுப் போர் தொடர்கிறது. அங்கு பஷர் அல் அசாத் என்பவரே கடந்த 2000ம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக இருந்தார்.

இந்தக் காலகட்டத்தில் அவருக்கு எதிராகப் பல முறை கிளர்ச்சி வெடித்தது. இருப்பினும், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் அவர் அதை முறியடித்தே வந்தார். இடையில் 2020ம் ஆண்டு அங்கு முக்கிய போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பிறகு அங்குச் சற்று அமைதி திரும்பியிருந்தது.
இருப்பினும், கடந்த டிசம்பர் மாதம் அங்கு மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. ஹெச்டிஎஸ் எனப்படும் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழுவினர் ஆட்சியைப் பிடித்த நிலையில், அசாத் ஆட்சி 24 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. அதன் பிறகு சிரியாவில் மெல்ல அமைதி திரும்பிக் கொண்டு இருந்தது. நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் இப்போது அங்கு மோதல் வெடித்துள்ளது.
சிரியாவில் தற்போதுள்ள பாதுகாப்புப் படையினருக்கும் ஜனாதிபதி பஷார் அசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் வெடித்துள்ளது. தொடர்ச்சியாக நடக்கும் இந்த சண்டைகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. சிரியாவில் கடந்த 14 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் தொடர்ந்த போதிலும், இந்தளவுக்கு வன்முறை எப்போதும் நிகழ்ந்ததே இல்லை என குறிப்பிடுகிறார்கள்.
அங்கு கொல்லப்பட்டவர்களில் சுமார் 750 பேர் அப்பாவி பொதுமக்கள் ஆவர். அவர்களும் கூட மிக அருகில் நெருக்கமான தூரத்தில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டே கொல்லப்பட்டுள்ளனர்.

இது தவிர அரசு பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 125 உறுப்பினர்களும், அசாத் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த 148 பேரும் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த தாக்குதல் தொடர்ந்து நடக்கும் நிலையில், லடாகியா நகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் அசாத் ஆட்சியில் இருந்த போது எண்ணற்ற கொடுமைகள் அரங்கேறின. அப்போதும் கூட அசாத்துக்கு ஆதரவாகவே அலவைட் சிறுபான்மை பிரிவினர் இருந்துள்ளனர்.
இதனால் அவர்களை பழிவாங்கும் நோக்கில் தற்போதுள்ள ஆட்சிக்கு ஆதரவான சிலர், அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் பலர் உயிரிழந்தனர். அதன் பிறகு அசாத் ஆதரவாளர்களும் பதிலடி தாக்குதலை ஆரம்பித்ததே இந்த வன்முறைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அரசு தரப்பு விரைவாக எடுத்த நடவடிக்கைகளால் மோதல் சற்று முடிவுக்கு வந்துள்ளது.
இந்த மோதலின் போது பெண்களுக்கு எதிராக சில மோசமான சம்பவங்களும் நடந்துள்ளன. சில பெண்கள் சிறைபிடிக்கப்பட்டு அவர்களின் ஆடைகள் கிழிக்கப்பட்டுள்ளன. மேலும், பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாகவும் அழைத்துச் சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து பெண்களையும் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த வன்முறையால் இரு நாட்களில் மட்டும் 1000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.