தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரால் பல பிரம்புகளால் மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோ தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
நுகேகொடை, கம்பஹா போன்ற இடங்களில் பொருளாதாரம் மற்றும் வணிகவியல் பாடங்களை கற்பிக்கும் இந்த தனியார் வகுப்பு ஆசிரியர் தனது வகுப்புகளில் உள்ள மாணவர்களை சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.
ஒரு வீடியோவில், மாணவியின் கைத்தொலைபேசியை எடுத்த மாணவனை, மாணவியின் கைகளில் பல பிரம்புகளை கொடுத்து அடிக்க வைத்துள்ளார்.

பின்னர் அந்த பிரம்புகளால் மாணவனை ஆசிரியரும் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதையடுத்து குறித்த ஆசிரியையின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் யார் என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, 18 வயதுக்குட்பட்டவர்களே குழந்தைகளாக கருதப்படுவதாகவும், உயர்தர வகுப்புகளில் படிக்கும் சில மாணவர்கள் 19 வயதை பூர்த்தி செய்துள்ளதால், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகார சபையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.