அதிக ஞாபகத்திறன் மூலம் 650 இற்கும் மேற்பட்ட பட அட்டைகளின் பெயர்களை அடையாளம் கண்டு ஒப்புவித்து சோழன் உலக சாதனை படைத்த 29 மாதங்களேயான மட்டக்களப்பைச் சேர்ந்த குழந்தை துஷ்யந்தன் மஹிஷெறான் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (13) மட்டக்களப்பு கல்லடியில் உள்ள சுற்றுலா விடுதியில் நடைபெற்றது.
இவர் மட்டக்களப்பு நாவற்குடாவில் வசித்து வரும் மருத்துவர் துஷ்யந்தன் தர்மசுந்தரம் மற்றும் மருத்துவர் றமாஜினி துஷ்யந்தன் ஆகியோரது குழந்தையாவார்.
சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் மற்றும் கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம் என்பன இணைந்து இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்வானது சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இலங்கைக்கான சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் துனைச் செயலாளர் கதிரவன் த.இன்பராசா தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண சபை பிரதி பிரதம செயலாளர் மு.கோபாலரெத்தினம் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக அருட்பணி அ.யேசுதாசன் கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பேராசிரியர் பாரதி கென்னடி,மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரி அதிபர் மா.சோமசூரியம், கண்ணகி கலை இலக்கிய கூடல் தலைவர் செங்கதிரோன் த.கோபலகிருஷ்ணன் மற்றும் அதிபர் அ.குலேந்திரராஜா உட்பட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சாதனைக் குழந்தையை பாராட்டி கௌரவித்தனர்.

இதன்போது சோழன் உலக சாதனை தங்கப் பதக்கம், சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ்.சோழன் சின்னம், சோழன் உலக சாதனை விபரம் அடங்கிய கோவை மற்றும் நினைவுக் கேடயம் என்பன வழங்கி சாதனைக் குழந்தை கௌரவிக்கப்பட்டது.
அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள்,பார்வையாளர்களால் சிறப்பு பரிசில்களும் வழங்கி பாராட்டினர்.
சோழன் உலக சாதனை புத்தகத்தில் கிழக்கு மாகாணத்தில் இடம் பிடித்த மிகக் குறைந்த வயதுடைய குழந்தை என்பது குறிப்பிடத்தக்கதும், பெருமைக்குரியதுமான விடயமாகும்.
















