உணவுப் பொதியை உரிய நேரத்தில் சாரதி பெட்டியில் வைக்கவில்லை என எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 22ஆம் திகதி குருநாகலிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலான ரயிலை 30 நிமிடங்களுக்கு மேல் தாமதப்படுத்திய சாரதி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சாரதிகளின் கடுமையான பற்றாக்குறையால் சம்பந்தப்பட்ட சாரதியை பணி இடைநிறுத்தம் செய்ய முடியாது எனவும், அவர் பணிபுரியும் போதே விசாரணை நடத்தப்படும் எனவும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
குருநாகல் புகையிரத நிலையத்தில் இருந்து மதியம் 12.30 மணியளவில் புறப்பட வேண்டிய இந்த ரயில் சாரதி உணவுப் பொதியை குறித்த நேரத்தில் சாரதியின் அறைக்குள் வைக்கவில்லை என எதிர்ப்புத் தெரிவித்து 30 நிமிடங்களுக்கும் மேலாக ரயிலை தாமதப்படுத்தியுள்ளார்.

இந்த தாமதத்திற்கு ரயில் நிலைய பயணிகளும் அதிகாரிகளும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து குருநாகல் ரயில் நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதேவேளை உணவுப் பொதியை பெற்றுக் கொண்ட சாரதி ரயிலை செலுத்த ஆரம்பித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தையடுத்து ரயில் கால அட்டவணையை சில நாட்களுக்கு இரத்து செய்த ரயில்வே அதிகாரிகள், பொல்கஹவெல நிலையம் வரை மாத்திரம் சேவையில் ஈடுபடுவதாக புகையிரத பயணிகள் தெரிவித்துள்ளனர்.
சாரதிகள் பற்றாக்குறையினால் சம்பவம் இடம்பெற்று பல நாட்களாக ரயில் இயங்கவில்லை என்பதை அறிந்த பின்னர் அது தீர்க்கப்பட்டதாகவும் எதிர்காலத்தில் ரயில் தனது வழமையான கால அட்டவணையில் இயங்கும் எனவும் தம்மிக்க ஜயசுந்தர மேலும் குறிப்பிட்டார்.