கிழக்கு பல்கலைக்கழகத்தின் மீயுயர் சபையான பேரவையின் 15 வெளிவாரி உறுப்பினர்களில் 7 இடங்களுக்கு சிங்கள உறுப்பினர்களை நியமித்திருக்குகின்றார்கள். அதே போல வெறும் 5 இடங்களுக்கு தமிழ் உறுப்பினர்களும், 3 இடங்களுக்கு முஸ்லிம் உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
அந்த வகையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நியமனங்கள், துணைவேந்தர் தெரிவு, விரிவுரையாளர்களை அமர்த்தவும், நீக்கவும் அதிகாரமுள்ள பேரவையில் சிங்கள உறுப்பினர்கள் முதல் முறையாக ஆதிக்கம் செலுத்த இருக்கின்றார்கள்.
இதன் தொடர்ச்சியாக கிழக்கு பல்கலை கழகத்திற்கு மிக விரைவில் சிங்கள துணைவேந்தர் ஒருவரை நியமிக்க இருக்கின்றார்கள் என சொல்லப்படுகின்றது.
இது போதாதென்று வவுனியா பல்கலைக்கழக பேரவையின் 7 வெளிவாரி உறுப்பினர்களில் 3 சிங்கள உறுப்பினர்களும் 3 தமிழர்களும் 1 முஸ்லிம் பிரதிநிதியும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

சிங்கள மயமாகி வரும் யாழ்ப்பாண பல்கலைகழக பேரவையின் 15 வெளிவாரி உறுப்பினர்களில் 3 சிங்கள உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.
இது தவிர கிழக்கு மாகாணத்தை குறி வைத்திருக்கும் ஜேவிபி சிங்கள ஆளுநருக்கு மேலதிகமாக அதன் பிரதம செயலாளராகவும் சிங்கள அதிகாரியை நியமித்துள்ளது.
கிழக்கு மாகாண பொதுசேவை ஆணைக்குழுவின் தலைவராகவும் சிங்கள அதிகாரியே நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர் காலத்தில் மக்களால் தெரிவு செய்யப்படும் எந்தவொரு முதலமைச்சருக்கும் பொறுப்பு கூற வேண்டிய அவசியம் 13 ஆம் திருத்தத்தின் கீழ் இந்த அதிகாரிகளுக்கு இருக்க போவதில்லை. அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சருக்கே பொறுப்பு கூற வேண்டிய கட்டாயம் இல்லாத நிர்வாக அலகை ஜேவிபி உருவாக்கி வருகின்றது.
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு வழமை போல சிங்கள அதிகாரிகளே அரச அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
வடக்கு மாகாணத்தில் வவுனியா மாவட்டத்திற்கும் சிங்கள அதிகாரி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிங்கள ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்டுள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கும் கல்கமூவ சாந்தபோதி தேரர் உட்பட்டவர்களுடன் தொடர்புடைய சிங்கள பிரதேச செயலாளர் ஒருவரே நியமிக்க பட இருக்கின்றார்.
வவுனியா, வன்னி மாவட்டத்தில் ஜேவிபியில் போட்டியிட்டு இரு தமிழ் பாராளமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையிலும் தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்ட சிங்கள உறுப்பினரே ஒருங்கிணைப்பு குழு தலைவராக்கப்பட்டள்ளார்.
இவ் நியமனங்கள் ஊடக வவுனியா வடக்கு தமிழ் கிராமங்களின் எல்லைக்கோட்டின் வழி ஊடக நகர்ந்து மணலாறு சிங்கள குடியேற்றங்களை இணைத்து பரவும் பரந்த குடியேற்றத்தினை செறிவாக்க முயற்சிக்கின்றார்கள் போல் உள்ளது.
இது போததென்று 27 பேர் அங்கம் வகிக்கும் அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளர் பட்டியலில் வெறும் இரண்டு தமிழ் அதிகாரிகளுக்கு மட்டும் இடம் கிடைத்துள்ளது.
அரசாங்கத்திற்கு சொந்தமான 52 அரச நிறுவனங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள தலைமை பதவி நியமனத்திலும் எந்தவொரு தமிழ் அதிகாரிகளுக்கும் இடம் வழங்கப்படவில்லை.
அதே போல அரசாங்கத்தின் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் உட்பட அரச கட்டமைப்புகளிலும் தமிழ் அதிகாரிகளுக்கு போதிய பிரதிநித்துவம் கிடைக்கவில்லை.
50 நாடுகளில் இயங்கும் இலங்கையின் வெளிநாட்டு தூதுவராலயங்களின் தலைமை பதவிகளுக்கும் வெளிநாட்டு சேவையியுள்ள எந்த தமிழ் அதிகாரிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
வெளிநாட்டு சேவையுள்ள திறமையுள்ளோருக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படும் என ஜேவிபி அறிவித்திருந்துள்ள நிலையில் அதற்கு மாறாக தங்கள் கூட்டாளிகளை நியமித்து வருகின்றது.
ஆனால் இதிலும் ஜேவிபி யில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினர்களுக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை, விசேடமாக திரு அனுரா குமார திஸ்ஸநாயக்க நியமித்துள்ள ‘Clean Sri Lanka’ செயலணியிலும் தமிழ் அதிகாரிகளுக்கு இடம் வழங்கப்படவில்லை.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுற்றுல்லா ஆலோசனை சபையிருக்கும் கூட தமிழ் பிரதிநித்துவம் முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அரசியல் நியமனங்கள் ஒன்றும் புதிய விடயமல்ல. ஆனால் இலங்கையராக ஒன்றிணைவோம் என பேசும் ஜேவிபி காலத்தில் தான் இது மோசமான நிலையை எட்டியுள்ளது.
இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் திறமை அடிப்படையில் அரசியல் வேறுபாடு கடந்து சமத்துவம், பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம், தத்துவங்களை உள்வாங்கி வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்கும் அடிப்படை விடயத்தில் தவறிழைத்து விட்டு அபிவிருத்தி மற்றும் ஊழல் பற்றி பேச முடியாது
ஆனால் அபிவிருத்தி மற்றும் ஊழல் என வெறும் வாயால் பேசும் ஜேவிபி எல்லாவிதமான அசிங்களையும் செய்கின்றது.
இங்கு வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் உட்பட அரச நிர்வாக கட்டமைப்பில் சிங்கள அதிகாரிகள் பணியாற்ற முடியாது என வாதிட முடியாது.

போட்டி தேர்வு /நேர்முகம் மூலம் திறமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் யாரும் எங்கும் பணியாற்ற முடியும். ஆனால் குறித்த இன /சமூக பிரிவை சேர்ந்தவர்கள் என்பதன் அடிப்படையில் வாய்ப்புகளை மறுப்பதும் திட்டமிட்ட ரீதியில் நிர்வாக கட்டமைப்புகளை சிங்கள மயப்படுத்துவதும் அருவருக்கத்தக்க செயல்களாகும்.
கடந்த 70 ஆண்டுகளாக தொடரும் இந்த அருவருக்க தக்க பாரம்பரியத்தை ஜேவிபியும் வெளிப்படையாக தொடருகின்றது.
ஆனால் வெறும் வாயில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக ஜேவிபி அலம்புகின்றது.