நாடளாவிய ரீதியில் இன்று 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சிசபைத் தேர்தல் இடம்பெறுகின்றது.
சுதந்திரமானதும் நீதியானதுமான வகையில் தேர்தலை நடத்த சட்டத்தின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்குரிய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும். வாக்களித்ததன் பின்னர் வீடுகளுக்குச் செல்லுங்கள்.
நாட்டின் சட்டம் மற்றும் பொது ஒழுங்கை முறையாக கடைபிடிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க நாட்டு மக்களிடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளதாவது,
339 உள்ளுராட்சி அதிகார சபைகளுக்கான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை (6) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். ஆணைக்குழு தனக்கான பொறுப்பை நிறைவேற்றியுள்ளது. இனி உங்களின் பொறுப்பை நிறைவேற்றுங்கள்.
சுதந்திரமானதும் நீதியானதுமான வகையில் தேர்தலை நடத்த சட்டத்தின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும். உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் முழுமையாக பயன்படுத்தப்படும். வாக்களித்ததன் பின்னர் வீடுகளுக்குச் செல்லுங்கள்.
நாட்டின் சட்டம் மற்றும் பொதுஒழுங்கை நாட்டு மக்கள் அனைவரும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
வாக்கெடுப்பு நிலையத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் முழு வாக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படும். ஆகவே, அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
அரச மற்றும் தனியார்துறை சேவையாளர்கள் வாக்களிக்கச் செல்வதற்கு இயலுமான வகையில் விடுமுறை வழங்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தோம். ஒருசில தனியார் துறையினர் தமது சேவையாளர்கள் வாக்களிக்க செல்வதற்கு விடுமுறை வழங்கவில்லை என்று ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய செயற்படுமாறு தனியார் துறை சேவை வழங்குநர்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
தேசிய அடையாள அட்டை, வாகன அனுமதி பத்திரம் மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை வாக்களிக்கும் போது எடுத்து செல்ல வேண்டும்.
வாக்களிப்புக்கான தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக, அலுவலக அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக விண்ணப்பம் செய்தமைக்கான பிரதி ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம்.
அத்துடன், வாக்குச்சீட்டில் கட்சிகளின் பெயர்களுக்கு எதிரே கட்சிகளின் சின்னங்களும் சுயேச்சைக்குழுக்களின் பெயர்களுக்கு எதிரே சுயேச்சைக் குழுக்களின் சின்னங்களும் இருக்கும், அதற்கு எதிராக வெற்றுக்கட்டம் இருக்கும், அதில் புள்ளடி (X) இடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
வாக்குச்சீட்டில் எழுதவோ, சித்திரம் கீறவோ, கிறுக்கவோ, எண்ணங்களை எழுதவோ, பெயர்களை எழுதவோ வேண்டாம். புள்ளடி (X) இடப்படாத எந்தவொரு வாக்குச்சீட்டும் நிராகரிக்கப்படும் என்றார்.
மீறினால் தண்டனை
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது வாக்கெடுப்பு நிலைய எல்லைக்குள் அல்லது வாக்கெடுப்பு நிலையத்தின் நுழைவாயிலிலிருந்து அரை கிலோ மீற்றர் தூரத்தில் சில செய்பாடுகளை மேற்கொள்ளுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள செயல்களில் ஈடுபடுபவர்கள் தண்டனைக்கு ஆளாக்கப்படலாம் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
- வாக்களிக்குமாறு இரந்து கேட்டல்
- எவரேனும் தேருநரின் வாக்கை பரிந்து கேட்டல்
- குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என கூறி தேருநரை வசப்படுத்த முயலுதல்
- தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் விளம்பரங்கள், துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள், புகைப்படங்கள் மற்றும் சின்னங்களை விநியோகித்தல் அல்லது காட்சிப்படுத்தல்.
புகைப்படம், காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட தடை
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் மேற்கொள்ளுவதற்கு சட்டத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது,
வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் மேற்கொள்ளுவதற்கு சட்டத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பின்வருமாறு ;
கையடக்கத் தொலைபேசிகளை பாவித்தல்
புகைப்படம் எடுத்தல்
காணொளி எடுத்தல்
ஆயுதங்களை வைத்திருத்தல்
புகைபிடித்தல், மதுபானம் அருந்துதல் அல்லது போதைப்பொருட்கள் பாவனை செய்தல்
மதுபானம் அருந்துவிட்டு அல்லது போதைப்பொருட்கள் பாவனை செய்துவிட்டு வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் வருகை தருதல் போன்றவற்றுக்கு சட்டத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை புகைப்படம் அல்லது காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுவது தேர்தல் சட்டங்களை மீறும் செயல்களாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனவே, வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் வாக்குச் சீட்டுகளையும் புகைப்படம் அல்லது காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
4,628 முறைப்பாடுகள் பதிவு!
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 04 ஆம் திகதி) 4,628 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 35 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 4,284 முறைப்பாடுகளும் ஏனைய விடங்கள் தொடர்பில் 309 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.