ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நேற்று (07) அதிரடி தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 9 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் தினேஷ் குமார் என்ற இராணுவ வீரர் வீர மரணமடைந்தார். எல்லைப் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் இராணுவத்தினர் இன்றும் (08) தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.