மட்டக்களப்பு – ஏறாவூர் மசூதியொன்றில் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாக பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் பரவுவது குறித்து சமீபத்தில் தான் தகவல்களை வெளியிட்டதை தொடர்ந்தே இவ்வாறு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஏறாவூரின் பாரம்பரிய முஸ்லிம் சமூகம் தீவிரவாத ஒடுக்குமுறை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனது உதவியை கோரியுள்ளது என தெரிவித்துள்ள ஞானசார தேரர், அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் மத்தியில் உள்ள தீவிரவாத சக்திகள் குறித்து தகவல்களை வழங்கியுள்ளதுடன் இவற்றை பகிரங்கப்படுத்துமாறு கோரியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

லிபியா கடாபி குழு என்ற குழுவினர் வட்ஸ்அப் மூலம் அச்சுறுத்தும் செய்திகளை வெளியிட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் அறிவித்துள்ளதாக தெரிவித்த அவர், நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகள் மற்றும் மத வெறுப்புணர்வு மிகவும் அதிகரித்துள்ளதை வெளிப்படுத்துவதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏறாவூரை சேர்ந்த நபர் ஒருவரின் பெயரை வெளியிட்டுள்ள ஞானசார தேரர், அவர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார், பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.