இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக குறிப்பிடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட கருத்தை வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உடனடியாக மீள பெற வேண்டும். இனப்படுகொலை குற்றச்சாட்டை எதிர்கொள்ள இலங்கைக்கு முதுகெலும்பு இல்லை. அரசாங்கத்தின் நிலைப்பாடு கேலிக்கூத்தானது. நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று (23) நடைபெற்ற குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வழங்கிய நேர்காணலின்போது இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாக கூறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்ற கருத்தை கூறியுள்ளார். இதனை நானும் அவதானித்தேன். இது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு மேற்பட்ட கருத்து. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அரசாங்கத்தின் நகைப்புக்கிடமான, கேலிக்கூத்தான மனநிலையை இந்த கூற்று வெளிப்படுத்துகின்றது.
வெளிவிவகாரத்துறை அமைச்சர் என்பவர் சர்வதேசத்திற்கு பதில் சொல்லக்கூடியவர். ஆகவே அவர் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்திருக்க கூடாது. இனப்படுகொலை குற்றச்சாட்டை எதிர்க்கொள்ள இலங்கைக்கு முதுகெலும்பு இல்லை. அதனால்தான் இவ்வாறான பிழையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இனப்படுகொலை என்பது ஒரு குற்றம். இலங்கை ரோம் உடன்படிக்கைக்கு கூட உடன்பட வேண்டும்.