உகந்தைமலை பகுதியில் புத்தர் சிலையினை அமைத்து சட்ட விரோதமாக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளை அடிப்படைவாதிகள் கைவிட வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற குழு பேச்சாளர் ஞா.சிறீநேசன் தெரிவித்தார்.
கனடா – இலங்கை முன்னாள் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் 10 வீட்டுத்திட்டத்தின் கீழ் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் ஆகிய இடங்களில் வீடு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (28) நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன், “இந்த உகந்தை மலையில் ஒரு புத்தர் சிலையை நிறுவி இருக்கின்றார்கள்.

உண்மையில் நாங்கள் மதத்திற்கு மரியாதை கொடுக்கின்றவர்கள். புத்த பகவானை பொருத்தவரையில் அவர் உண்மையில் அமைதியாக மக்கள் வாழ வேண்டும். குழப்பங்கள் இருக்கக் கூடாது காருண்யம் பேணப்பட வேண்டும். எந்த இடத்திலும் குழப்பங்கள் கலவரங்கள் சண்டைகள் தனது பெயரால் இடம்பெறக்கூடாது என விரும்புபவர்.
இவ்வாறு இருக்கத்தக்கதாக உகந்தை மலையில் முருகன் ஆலயத்திற்கு பக்கமாக இப்போது சட்டவிரோதமாக ஒரு புத்தர் சிலையை அமைத்திருக்கின்றார்கள். இதன் காரணமாக இப்போது அந்த இடத்தில் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது. நாங்கள் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்ற ஒரு விடயம் இந்த விடயத்தில் நீங்கள் ஒரு இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
சகல மக்களையும் சமத்துவமாக சம தர்மமாக வழிநடத்த வேண்டும் என்கின்ற உங்களுடைய வார்த்தைகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்ற வேளையில் இந்த நாட்டில் மீண்டும் ஒரு கலாசார ரீதியான பண்பாட்டு ரீதியான ஒரு ஆக்கிரமிப்பை அல்லது முருகன் ஆலயத்திற்கு பக்கத்தில் இன்னும் ஒரு சிலையை நிறுவுவதன் மூலமாக நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தாமல் இவ்வாறான சட்ட விரோதமான செயற்பாடுகளை தடுக்க வேண்டும்.

குறிப்பாக சொல்லப்போனால் வன வள திணைக்களமானது இந்த விடயத்தில் அக்கறையின்றி இருக்கின்றது அல்லது அனுமதி கொடுத்து இருக்கின்றது என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் முருகன் ஆலயம் அமைக்கின்ற விடயத்தில் அவர்கள் தடைகளை விதித்திருந்தார்கள். ஆனால் புத்தர் சிலை வைக்கின்ற விடயத்தில் ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள்.
இது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் சட்டவிரோதமாக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளை அடிப்படைவாதிகள் கைவிட வேண்டும். இதனை அரசாங்கம் விழிப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லாதுவிட்டால் தேவையற்ற விளைவுகளை கடந்த காலங்களில் ஏற்பட்டது போன்று ஏற்படுவதற்கு வழி கூறும் என்பதனை கூறிக் கொள்கின்றேன். அடுத்ததாக மட்டக்களப்பு – மகிழவட்டவான் பாலம் உடைந்து இருக்கின்றது.
அந்த உடைந்த பாலத்தை செய்வதற்காக ஆக்கபூர்வமான செயல்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதற்காக 7 கோடி ரூபாய் நிதி வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மூலமாக ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அங்கு மண் பரிசோதனை செய்வதன் மூலமாக அடியில் இருக்கின்ற பாறையை கண்டறிந்து அதில் பாலத்தை அமைப்பதற்கான செயல்பாடுகளை அவர்கள் முன்னெடுத்து இருக்கிறார்கள். இது வீதி அபிவிருத்தி திணைக்களம் எனக்கு அண்மையில் குறிப்பிட்ட ஒரு செய்தி.

ஆகவே அவ்வாறு இருக்கின்ற போது தேவை இல்லாத ஒரு குளறுபடிகளை ஏற்படுத்துவதற்காக சில அரசியல் சக்திகள் அந்த இடத்தில் பாலம் அமைக்கவில்லை, அரசியல்வாதிகள் வரவில்லை என்று எல்லாம் போலியான குற்றச்சாட்டுகளை கூறியிருக்கின்றார்கள. இது அரசாங்கத்தின் செயல்பாடு தாமதமாக நடைபெறுகின்றது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். அதற்கான நிதி 7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. என்பதனையும் நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.
அடுத்ததாக தமிழரசு கட்சி இந்த பிரதேச சபைகளை அமைக்கின்ற விடயத்தில் சிக்கலான ஒரு பிரதிநிதித்துவம் காரணமாக சில ஆசனங்கள் தமிழரசு கட்சி பெரும்பான்மையாக வென்று இருந்தாலும் ஆசனங்கள் தேவைப்படுகிறது. எனவே இந்த இடத்தில் தமிழ் பேசும் கட்சிகள் அதாவது தமிழ் பேசும் உறுப்பினர்களை கொண்ட கட்சிகள் தமிழ் தேசிய கட்சிகள் அல்லது சுயேட்சை குழுக்களாக போட்டியிட்டாலும் அவர்களையும் இணக்கப்பாட்டுடன் இந்த சபைகளை அமைப்பதற்கு உதவி செய்ய வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி கூறி இருக்கின்றது எந்த இடத்தில் கூடுதலான ஆசனங்கள் புறப்பட்டு இருக்கின்றதோ அந்த இடங்களில் அந்தந்த கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு தாங்கள் தடையாக இருக்க மாட்டோம் ஆட்சி அமைக்கின்ற விடயங்களில் தாங்கள் ஒரு நடுநிலையாக செயல்படுவோம் என்கின்ற கருத்தையும் கூறி இருக்கின்றார்கள்.
அதேபோன்று இன்னும் ஒரு விடயம் வடபுலத்தில் வர்த்தமானி மூலமாக பறிக்கப்பட்ட காணிகள் அல்லது சுவீகரிக்கப்பட்ட காணிகள் விடயத்தில் இப்போது இன்னும் ஒரு வர்த்தமானி மூலமாக அந்த காணிகளை மீண்டும் பெற்று அந்தந்தகாணிகளை மக்கள் பக்கமாக செல்வதற்கு அனுமதி அளிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டு இருக்கின்றார். அந்த அடிப்படையில் பார்க்கின்ற போது இந்த நல்ல விடயத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். நல்ல விடயங்களை யார் செய்தாலும் பாராட்டுவோம்.
எனவே, நாட்டில் குழப்பம் இல்லாமல் காணி அபகரிப்பை மற்றும் ஏனைய தேவையற்ற விடயங்களை கைவிட்டு நல்லிணக்க விடயங்களை கையாள வேண்டும். ஆகவே வட குளத்தில் பறிக்கப்பட்ட அல்லது அபகரிக்கப்பட்ட, சுவிகரிக்கப்பட்ட காணிகளை மீளவும் மக்களுக்கு ஒப்படைக்கின்ற விதத்தில் புதிய வர்த்தமானியை வெளியிட்டதற்காக இந்த இடத்தில் ஜனாதிபதிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இன்னும் ஒரு விடயம் கூறப்படுகிறது, மட்டக்களப்பில் பொது மருத்துவ மாதுக்கள் பயிற்சி நிலையம் என்று சொல்லப்படுகின்ற அந்த பயிற்சி பாடசாலையை இங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை பதில் சுகாதார அமைச்சின் செயலாளர் செய்துகொண்டு இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு சொல்லப்பட்டது.
இந்த விடயம் அரச கர்ம மொழியாக தமிழும் சிங்களமும் காணப்படுகின்ற போது தமிழில் பயிற்சி கொடுக்கின்ற இந்த பயிற்சி நிலையத்தை மூன்று விழா செய்வது என்பது தேவையற்ற ஒரு விடயமாகவும் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குகின்ற விடயமாகவும் காணப்படுகின்றது.
இதில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்பதை விட இவ்வாறான செயல்பாடுகளை செய்யக்கூடாது, செய்தால் அதுவும் இன நல்லிணக்கத்திற்கு ஆபத்தாக அமைந்து விடும் என்கின்ற கருத்தை கூறுகின்றேன். மட்டக்களப்பில் மூன்று இனங்கள் காணப்படுகிறன. தமிழர், முஸ்லிம், சிங்களவர்கள் என்பனவே.

மட்டக்களப்பில் கிட்டத்தட்ட 74 சதவீதமானோர் தமிழர்களாகவும் 26 சதவீதம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். சில சபைகளில் தமிழர்கள் மாத்திரம் பெரும்பான்மையாக இருக்கின்ற சபைகளில் சபைகளை அமைக்கின்ற விடயத்தில் தமிழ் பெரும்பான்மையோடு தமிழரசு கட்சியின் பெரும்பான்மை மற்றும் தமிழ் தேசிய கட்சியின் பெரும்பான்மையோடு அமைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
ஆனால், சில முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் கலந்து வாழுகின்ற பிரதேசங்களில் தமிழர்களின் ஒத்துழைப்பு முஸ்லிம் சபைகளை அமைப்பதற்கு தேவைப்படுகின்றது.
அதேபோன்று தமிழ் சபைகளை அமைப்பதற்கு முஸ்லிம் பிரதிநிதிகளின் அல்லது உறுப்பினர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. பரஸ்பரம் இந்த உதவிகள் உதாரணமாக ஓட்டமாவடி பிரதேச சபை ஏறாவூர் நகர சபை அமைக்கின்ற போது இதன் விடயத்தில் தமிழ் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு அவர்களுக்கு தேவைப்படுகின்றது.
அதேபோன்று ஏறாவூர் பற்று, வாழைச்சேனை மற்றும் வாகரை போன்ற பிரதேச சபைகளை அமைக்கின்ற விடயத்தில் தமிழர்களுக்கு முஸ்லிம்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது.
எனவே பரஸ்பர அடிப்படையில் இந்த ஒத்துழைப்புகளை செய்கின்ற விடயம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை திருகோணமலையில் செயல்பாட்டில் நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இது அவர்களுக்கும் தேவைப்படுகின்றது. எங்களுக்கும் தேவைப்படுகிறது. ஆகவே அதற்கு இடையில் தமிழ் தேசியம் சார்ந்தவர்களும் இந்த விடயத்தில் ஒத்துழைப்புகளை வழங்கினால் மிகவும் நன்றாக அமைந்திருக்கும் என்பதனை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.






