சர்வதேச சமூகம் தேசிய இனப்பிரச்னையில் அழுத்தங்களை வழங்க வேண்டுமென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்திருக்கின்றார். இவ்வாறான வேண்டுகோள்கள் தமிழ் அரசியல் சூழலுக்கு புதிதல்ல. யுத்தம் நிறைவுற்றதன் பின்னரான கடந்த பதினான்கு ஆண்டுகளாக இவ்வாறான கோரிக்கைகளுடன்தான் தமிழர் அரசியல் பயணித்துக் கொண்டிருக்கின்றது. கேள்வி – இன்னும் எவ்வளவு காலத்துக்கு இதனை உச்சரித்துக் கொண்டிருக்கப் போகின்றோம்?
அண்மையில், தமிழ் கட்சிகளின் தலைவர்களை (பாராளுமன்ற உறுப்பினர்கள்) சந்தித்திருந்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்எல்லாவற்றுக்கும் சர்வதேச சமூகத்திடம் முறையிடக் கூடாதென்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் சர்வதேச சமூகமென்பது என்ன – அது எந்தளவுதூரம் தலையீடு செய்யும் – என்னும் கேள்விகளுக்கு பதிலில் தெளிவுடன் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் தமிழர் அரசியல் சுயமுயற்சியின்றி மற்றவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் ஒன்றாகவே சுருங்கிப் போக நேரிடும். இதுரையில் இதுதான் நடந்திருக்கின்றது.
கடந்த பதினான்கு வருடங்களாக பலரும் பல முயற்சிகளில் ஈடுபட்டன ரெனக் கூறப்பட்டது. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும் புலம்பெயர் அமைப்புகளும் பலவாறான சர்வதேச உரையாடல்களில் ஈடுபட்டன என்று கூறப்பட்டது. ஆனால், அவற்றின் விளைவுகளை நோக்கினால் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நிலையில்எதுவுமில்லை. ஏன்? இந்தக் கேள்விக்கான பதில் தொடர்பில் அனைவரும் நேர்மையாக சிந்திக்க முன்வர வேண்டும்.
சர்வதேச சமூகம் என்பது அடிப்படையில் பலம் பொருந்திய நாடுகள்தான். பலம்பொருந்திய நாடுகளின் நலன்களும் அவற்றை வெற்றி கொள்வதற்கான இடையறாத அரசியல், பொருளாதார, இராணுவ நகர்வுகளுமே சர்வதேச அரசியலாகும். இந்த நகர்வுகளில் நீதியின் அடிப்படையில் விடயங்கள் தீர்மானிக்கப்படுவதில்லை – மாறாக நலன்களின் அடிப்படையிலேயே விடயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. இதனைப் புரிந்துகொண்டால் இலங்கையின் இனப்பிரச்னையில் பலம்பொருந்திய நாடுகள், எவ்வாறான அணுகுமுறையை காலத்துக்குக் காலம் முன்னெடுத்திருக்கின்றன – முன்னெடுத்து வருகின்றன என்பதை இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்.
இலங்கை விடயத்தில், இந்தியாவின் அணுகுமுறை பிராந்திய ரீதியானது. அயல்நாடுகளில் தனது செல்வாக்கை தக்கவைத்தல் என்னும் அடிப்படை யிலேயே இந்தியா விடயங்களை கையாண்டு வருகின்றது. இலங்கையின் ஆட்சியாளர்களின் அணுகுமுறைகளுக்கு ஏற்ப இந்தியாவின் அணுகுமுறைகள் அமைகின்றன. அமெரிக்காவை பொறுத்தவரையில் அதன் அணுகு முறை உலகளாவிய நலன்கள் தொடர்பானது. இதில், உலகளவில் மனிதஉரிமைகள் மற்றும் தாராளவாத அணுகுமுறைகளை பாதுகாத்தல் என்னும்
அடிப்படையில் அமெரிக்காவின் தலையீடுகள் அமைகின்றன. ஆனால், இந்த அணுகுமுறையும் தற்போது அதிகரித்துவரும் சீன செல்வாக்கால் கேள்விக்கு உள்ளாகியிருக்கின்றது.
இந்தப் பின்புலத்தில் நோக்கினால் இலங்கை விடயத்தில் சிங்கள பெரும்பான்மையை அதிகம் அதிருப்திக்கு உள்ளாக்கிவிடக் கூடாதென்னும் அடிப்படையிலேயே அமெரிக்காவின் அணுகுமுறை அமைந்திருக்கின்றது. இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் கரிசனையை காண்பிக்கும் ஏனைய மேற்குலக நாடுகள் அவ்வப்போது சில கருத்துகளை முன்வைத்தாலும்கூட, அவர்களின் அணுகுமுறையும் இலங்கையிலிருந்து அதிகம்விலகிவிடக் கூடாதென்னும் அப்படையிலேயே அமைந்திருக்கின்றன.இந்த நிலையில், தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான பிரத்தியேக ஈடுபாடு என்னும் வகையில் எந்தவொரு தலையீடும் இல்லை. சிங்கள ஆளும் வர்க்கம் இதில் மிகவும் தெளிவாக இருக்கின்றது. இதன் காரணமாகவே, தமிழ் மக்களுக்கான தேசிய இனப்பிரச்னை விவகாரத்தை சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் இலகுவாக இழுத்தடித்து வருகின்றனர். 13ஆவது திருத்தச் சட்டத்தைக்கூட, முழுமையாக அமுல்படுத்தும் விடயத்தில் கூட முன்னோக்கி நகர முடியவில்லை. இந்த விடயம் தொடர்பில் தெளிவான பார்வை தமிழ்த் தேசிய தரப்புகளிடம் இருக்க வேண்டும்