பாத்தி கட்டி செடி வளர்ப்பார்கள் ஆனால் சித்துப்பாத்தியிலே எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளை இவர்கள் புதைத்து வளர்த்திருக்கிறார்கள், தமிழின படுகொலைக்கு ஒரு சர்வதேச நீதி கிடைக்க வேண்டும் என தென்னிந்திய பிரபல இயக்குனரும் நடிகரும், இசையமைப்பாளருமான டி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
”செம்மணி சித்துப்பாத்தி மயானத்திலே அகழ்வாராய்ச்சி பணிகளின் போது இதுவரை 44 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டும், 47 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படும் உள்ளன.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தப் பகுதியில் இந்த சிங்கள இராணுவத்தின் வெறியாட்டத்தையும், அந்த ஓநாய்களினுடைய களியாட்டத்தையும், மயானத்தில் அவர்கள் ஆடிய ஆட்டத்தையும் தமிழர்கள் மீது அவர்கள் கொண்ட காட்டத்தையும் சர்வதேச உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த இடத்தில் அவர்கள் எங்களை புதைக்க விடுவதுமில்லை, எரிக்க விடுவதுமில்லை. அவர்கள் தமிழர்களை உயிரோடு மாய்த்தார்களா? அல்லது தமிழர்களை உயிரோடு புதைத்தார்களா?

இந்தப் புதைக்குழிக்குள்ளே இத்தனை உடல்கள் மீட்கப்படுகின்றன. தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள் வந்து கொண்டே இருக்கின்றன.
இதை பார்க்கும்போது தமிழர்களாகிய எமது நெஞ்சம் பதைபதைக்கிறது. மயானத்திலே பிணங்கள் எரிக்கப்பட்டால் அதுதான் வெந்து கொண்டிருக்கும்.








