கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தனது சகாவை நியமித்துக்கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சூழ்ச்சி செய்துவருவதாக குற்றஞ்சாட்டினார் பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில. மக்கள் தவறுதலாகவே தேசிய மக்கள் சக்திக்கு ஆட்சிபலத் தைக் கொடுத்துள்ளார்கள் என்பதை இந்த அரசாங்கத்தினர் புரிந்துகொண் டுள்ளதால் எஞ்சியுள்ள நான்காண்டை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள ஜனாதிபதி சூழ்ச்சி செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள கட்சி தலைமை அலுவல கத்தில் நேற்று (14) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
ஏப்ரல் மாதத்திலிருந்து கணக்காய்வாளர் நாயகம் பதவி வெற்றிடமாகவே இருந்து வருகிறது. அந்தப் பதவிக்கு அவசியமான தகுதிகளை முழுமை செய்துள்ள, கல்வி தகுதி, தொழில் தகுதி, அனுபவம் உள்ளிட்ட சகல தகுதிகளையும் கொண்டுள்ள தர்மபால கம்மன்பிலவுக்கு இந்தப் பதவியை வழங்காமல் அவர் பதில் கணக்காய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் அவரின் தகுதிகளை பூர்த்தி செய்துள்ளதுடன் கடமையாற்றிய திணைக்களத்தின் முழு ஒத்துழைப்பையும் நம்பிக்கையையும் பெற்றுக்கொண்டுள்ளார். தகுதியுடையவர்களுக்கு தகுதியான இடத்தை வழங்குவதென்றால், தர்மபால கம்மன்பிலவுக்கு இந்த பதவியைப் பெற்றுக்கொடுக்குமாறு கணக்காய்வு அதிகாரிகளின் சங்கம் ஜனாதிபதிக்கு எழுத்துப் பூரவமாக அறிவித்துள்ளது. அத்துடன் நிறுத்திவிடாமல் அந்த சங்கம் ஊடகச் சந்திப்பொன்றை நடத்தி நாட்டுக்கும் இந்த தகவலை அறிவித்திருந்தது.
இந்த கோரிக்கையை ஓரங்கட்டிவிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, களனி பல்கலைகழகத்தில் கல்விக் கற்ற தனது சகாவை கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு நியமித்துக்கொள்ள அரசியலமைப்புச் சபையின் அனுமதிக்காக முன்வைத்தார்.
அரசியலமைப்புச் சபையின் சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபலமாக தொழில் நிபுணர்கள் மூவர் மிகவும் வெளிப்படையான ஜனாதிபதியின் பரிந்துரையை நிராகரித்தமையின் காரணமாக கணக்காய்வைப் பற்றி எதுவும் தெரியாத நபரொருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமித்து நாட்டின் ஊழலை ஊக்விக்கும் அரசாங்கத்தின் சூழ்ச்சி அரசியலமைப்புச் சபையினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் அந்த சிவில் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று உறுப்பினர்களதும் பதவிக்காலம் ஜனவரி மாதம் 03 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. எனவே, ஜனாதிபதிக்கு தேவையானவர்கள் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டால் புதிதாக தெரிவு செய்யப்படும் சிவில் சமூக பிரதிநிதிகள் மூவரில் ஒருவர் ஜனாதிபதியின் யோசனைக்கு ஆதரவு தெரிவித்தால் தனது களனி சகா கணக்காய்வாளர் நாயகமாக நியமித்துக்கொள்வதற்கான வாய்ப்பு ஜனாதிபதிக்கு கிடைத்துவிடும்.

அதன் காரணமாகவே ஜனவரி மாதம் 03 ஆம் திகதி வரை பதில் கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்க வேண்டிய நிலைமைக்கு ஜனாதிபதி நிர்பந்திக்கப்பட்டுள்ளார். அதனூடாக கணக்காய்வாளர் நாயக நியமனங்களை காலந்தாழ்த்தி வருகிறார். முதலில் தர்மபால கம்மன்பிலவுக்கு இரு வாரங்களுக்கு பதில் காணக்காய்வாளர நாயகம் பதவியை வழங்கினார். பின்னர் ஒரு மாத காலத்துக்கு அந்த பதவியை நீடித்தார். தற்போது ஆறு மாதங்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளார். ஏழரை மாதங்கள் நிறைவடையும்போது அரசியலமைப்புச் சபையைச் சேர்ந்த சிவில் சமூக பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவடைந்துவிடும். புதிதாக சிலர் தெரிவு செய்யப்படுவார்கள். அதன்போது தமது சகாவை இந்தப் பதவிக்கு நியமித்துக்கொள்ளக் கூடியதாக இருக்கம் என கருதியே ஜனாதிபதி இவ்வாறு காலங்கடத்தி வருகிறார்.
கணக்காய்வாளர் பதவி சுயாதீன பதவியாக இருந்தால் மாத்திரமே ஊழலை முடிவுக்கு கொண்டுவரக் கூடியதாக இருக்கும். ஊழல் எதிர்ப்பு அரசாங்கம் என்று ஆட்சிக்கு வந்த இந்த தற்போதைய அரசாங்கத்துக்கு, கடந்த அரசாங்கங்களுக்கும் இல்லாத பாரிய பொறுப்பு இருக்கிறது. கணக்காய்வாளர் நாயகத்தின் பதவியை சுயாதீனமாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பும் இந்த அரசாங்கத்துக்குரியதாகும்.
ஆனால், வரலாற்றில் பெரும் ஊழல்வாதிகள் என்று குற்றச்சாட்டு முன்னவைக்கப்பட்ட ஜனாதிபதியொருவரோ அல்லது பிரதமரொருவரோ தமது நண்பரையோ, சகாவையோ கணக்காய்வாளர் நாயகப்பதவியில் அமரவைத்து அந்தப் பதவியை இழிவுப்படுத்த முயற்சித்ததில்லை. வரலாற்றில் முதல் முறையான ஜனாதிபதியொருவர் தனது நண்பரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க முயற்சித்து வருகிறார்.

இந்த அரசாங்கத்தில் ஊழல் இல்லை என்றால், தனது அரசாங்கத்தில் திருட்டு இடம்பெறாது என்ற நம்பிக்கை இருக்குமாக இருந்தால் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு யார் தெரிவு செய்யப்பட்டால் என்ன? நாட்டிலுள்ள உயர் அதிகாரியொருவருக்கு அந்த பதவியை வழங்குவது தனக்கு எவ்வாறு பிரச்சினையாகும். தனது நண்பர் ஒருவருக்கு நட்பு பாராட்டும் வகையில் இந்த பதவியை வழங்கினால் மாத்திரமே அரசாங்கத்தில் நிகழும் ஊழல் மோசடிகளை வேடிக்கைப் பார்க்கும் நிலைமை உருவாகும்.
தவறுதலாகவே மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆட்சிபலத்தைக் கொடுத்துள்ளார்கள் என்பது இந்த அரசாங்கத்தினருக்கு கொடுத்துள்ளார்கள். மக்களின் தவறானது , மக்கள் அவர்களின் தவறை உணரும் வரை மீண்டும் இடம்பெறாது. தற்போது கிடைத்துள்ள அதிகாரம் எதிர்காலத்தில் கிடைக்காது. அந்த நிலைப்பாட்டிலேயே இந்த அரசாங்கத்தினர் செயற்படுகின்றனர். எதிர்வரும் நான்கு வருடங்களில் மோசடி செய்யவே முயற்சிக்கிறார்கள். அவ்வாறு இல்லாவிட்டால் ஏன் கணக்காய்வாளர் பதவியை இழிவுப்படுத்த இவ்வளவு தூரம் முயற்சிக்கிறார்கள் என்பதை அரசாங்கம் நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
அரசியலமைப்புச் சபையே இந்த நியமனத்துக்கான அனுமதியை வழங்கவுள்ளது. அரசியலமைப்புச் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்றத்தால் சபாநாயகரிடம் கேள்வி எழுப்ப முடியும். ஜனாதிபதி சூழ்ச்சி செய்து தனது சகாவை கணக்காய்வாளர் நாயகத்தை நியமித்துக்கொள்வதற்காக ஜனவரி மாதம் 03 ஆம் திகதி வரை காலத்தை கடத்தி வருகின்ற நிலையில் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் எவரும் கேள்வி எழுப்பாமலுள்ளமை கவலைக்குரிய வியமாகும்- என்றார்.








