ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன நிலங்களை ஆக்கிரமிப்பதற்கும் எதிராக இன்று (04) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், அதிகாரிகள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்கத் தவறிவிட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் லஹிரு வீரசேகர ஆகியோர் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே மூத்த பொலிஸ் அதிகாரியுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த உரையாடலின் போது, இரண்டு வாரங்களுக்கு முன்பு விவாதிக்கப்பட்ட பிரச்சினைக்கு அதிகாரிகள் தீர்வு வழங்கத் தவறியதால் போராட்டம் நடத்தப்படுவதாக வசந்த முதலிகே கூறினார்.

“எங்களுக்கு இன்று பதில் தேவை. நீங்கள் எங்களிடம் பொய் சொல்ல முடியாது. இன்று ஜனாதிபதியின் செயலாளருடன் எங்களுக்கு ஒரு கலந்துரையாடல் தேவை. பேச்சுவார்த்தைக்கான திகதியை ஜனாதிபதி முன்னர் உறுதியளித்தார். நிலைமை தாங்க முடியாத கட்டத்தை எட்டியதால், நாங்கள் இன்று வந்துவிட்டோம்,” என்றும் வசந்த முதலிகே அதிகாரியிடம் கூறினார்.








