தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களின் 50வது பிறந்த தினம் இன்று (19) வாகரை பணிச்சங்கேணியில் பல்வேறுபட்ட நிகழ்வுகளுடன் நேற்று (19) கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வு கட்சியின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்வி, கலை, கலாச்சார பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.
‘உதிரம் கொடுப்போம் – உயிர் காப்போம்’ என்ற தொணிப் பொருளில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட பூஜையும் அன்னதானமும் நடத்தப்பட்டது.
ஆதரவாளர்கள் 50 மண் பானைகளில் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்து வழிபட்டனர்.

இந்த நிகழ்வில் கட்சியின் தற்போதைய தலைவர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நா. திரவியம், கட்சியின் செயலாளர் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், வாகரை பிரதேச சபை தவிசாளர் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
சிவநேசதுரை சந்திரகாந்தன் தற்போது ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவிந்திரநாத் படுகொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் காரணமாக, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
















