தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை நாளை (04) நண்பகலுக்குப் பின்னர் படிப்படியாகக் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்னகே இதனை அறிவித்தார்.
எனினும், பசுபிக் பெருங்கடலில் ஜப்பானின் தென்பகுதிக்கு அருகில் உருவாகி வரும் சூறாவளி காரணமாக, ஆகஸ்ட் 6ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டின் வானிலையில் மீண்டும் மாற்றம் ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன் தாக்கத்தால் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாகவும், குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தற்போது நிலவும் கொந்தளிப்பான வானிலை நாளை நண்பகலுடன் தணியும் என்றாலும், 6ஆம் திகதியைத் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரிப்பதுடன், சில நாட்களுக்கு மீண்டும் மழை நிலைமை தீவிரமடையக்கூடும் என பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.








