இலங்கையில் நேற்று (02) இடம்பெற்ற சந்திர கிரகணம் பெரும்பாலான மக்களால் காணக்கூடியதாக இருந்தது. ஆனால், சில பகுதிகளில் நிலவும் மேக மூட்டம் மற்றும் மழை காரணமாக அதைப் பார்க்க முடியாமல் போனது.
திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேச மக்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருந்து, இரவு 10.00 மணி முதல் 11.30 மணி வரை நேரடியாக சந்திர கிரகணக் காட்சியைப் பார்வையிட முடிந்தது. அப்பகுதியில் சிவப்பு நிறத்தில் தோன்றிய நிலா பலரையும் கவர்ந்தது.



இந்நிலையில், இலங்கையின் பல இடங்களிலும் மக்கள் நிலவின் சிவப்பு நிறக் காட்சியை கவனித்ததோடு, புகைப்படங்களை எடுத்தும் சமூக ஊடகங்களில் பகிர்ந்தும் இருந்தனர். மட்டக்களப்பின் சில பகுதிகளிலும் கிரகணத்தை காண முடிந்தது. அதேசமயம், பல இடங்களில் மழை மற்றும் மேக மூட்டம் காரணமாக சிலரால் காண இயலவில்லை.

உலகளாவிய ரீதியில் இந்த சந்திர கிரகணம் சுமார் 85 சதவீதம் முழுமையான அல்லது பகுதி கிரகணமாக தென்பட்டதாக வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கட்டாரிலும் இதே காட்சி தென்பட்டதாக அங்கிருந்து மக்கள் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.
வானியல் நிபுணர்கள் தெரிவித்ததாவது, 2028 ஆம் ஆண்டு வரை இலங்கையில் மீண்டும் சந்திர கிரகணத்தை மக்கள் காண இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது.








