இலங்கையில் 1200cc வரையிலான உயர் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை சட்டரீதியாக பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் மோட்டார் விளையாட்டுத்துறை மற்றும் விளையாட்டுச் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு உயர் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களின் பயன்பாடு முக்கிய பங்காற்றும் என அவர் தெரிவித்துள்ளார்.
முறையான பாதுகாப்பு விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளின் கீழ் இவ்வகை மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்து பயன்படுத்த அனுமதிப்பது பொருத்தமான நடவடிக்கையாக இருக்கும் என நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவ்வாறான வாகனங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு வரி மற்றும் பதிவு கட்டணங்கள் ஊடாக மேலதிக வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயர் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்துவதற்கான அனுமதி நீண்டகாலமாக எதிர்பார்த்து வரும் இளைஞர்களின் கோரிக்கைகளுக்கும் தீர்வாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மோட்டார் விளையாட்டுத் துறையை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்லவும், புதிய சுற்றுலா வாய்ப்புகளை உருவாக்கவும் இத்தகைய நடவடிக்கைகள் உதவும் என நாமல் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.








