“புத்தகங்களின் பக்கங்கள் முடிவுறலாம் ஆனால் ஆசிரியர்களின் தாக்கங்கள் முடிவுறாது” என்ற எண்ணக்கருவை மையமாகக் கொண்டு, ஆசிரியர் தின விழா வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலயத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ஆசிரியர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில், அதன் தலைவர் மற்றும் வித்தியாலய அதிபர் யூ. எல். ஹரீஸ் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. அனைத்து ஆசிரியர்களும் ஒரே நிற ஆடையுடன் கலந்து கொண்டு தங்கள் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தினர்.
விழா பாடசாலை கீதம், தேசியக்கீதம், ஆசிரியர் கீதம் ஆகியவற்றின் இனிமையான இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து ஆசிரியர்கள் பாடல், பேச்சு, நடனம், உரைச்சித்திரம், கவிதை மற்றும் பன்மொழிப் பாடல்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் தங்கள் திறமை, புலமை மற்றும் கலைநயத்தை வெளிப்படுத்தினர்.
மலேசியா மற்றும் இலண்டன் வாழ் சமூக ஆர்வலர்கள் ஆசிரியர்களுக்கு பெறுமதியான பரிசுப்பொருட்களை வழங்கியதோடு, ஒரு பிரதேச நலன் விரும்பி ஆசிரியர்களுக்காக சிறப்பு பகல் போசன விருந்தையும் ஏற்பாடு செய்திருந்தார்.












