ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைப் பரப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பொலிஸ் அதிகாரி ஒருவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரி இன்று (31) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பதிவுகள் மற்றும் பிரச்சாரங்கள் தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மேலதிக விசாரணைகள் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அதிகாரி, எம்பிலிப்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பணியாற்றியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (31) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.








