மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று (31) மாவட்ட செயலகத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில் கெந்துநெத்தி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், நரிப்புல்தோட்டம் – பங்குடாவெளிப் பாலம், மகிழவட்டவான் பாலம் மற்றும் அம்பிளாந்துறை – குருமன்வெளிப் பாலம் ஆகியவற்றை விரைவாகப் புனரமைத்து மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அத்துடன், அம்பிளாந்துறை – குருக்கல்மடம் மற்றும் குருமன்வெளி – மண்டூர் பாதைகளை மக்கள் இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும், மாவட்டத்தில் சேதமடைந்துள்ள யானை வேலிகளைப் புனரமைத்தல், புதிய யானை வேலிகளை அமைத்தல் மற்றும் மட்டக்களப்பில் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுதல் உள்ளிட்ட விடயங்களும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.எல்.ஏ. ஹீஸ்புல்லா, இரா. சாணக்கியன், இ. சிறிநாத், க. பிரபு ஆகியோரும், பிரதேச சபைத் தலைவர்களும், அரச அதிகாரிகளும் கலந்துகொண்டு தங்களது பிரதேசங்களின் அபிவிருத்தித் தேவைகள் மற்றும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கருத்துகளை முன்வைத்தனர்.








