மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பிரிவுகளில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, 25 கிராம் ஐஸ் மற்றும் 310 மில்லிகிராம் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் குறித்த நபர்கள் நேற்று (10) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், காத்தான்குடி மஞ்சந்தொடுவாய் பகுதியில் வியாபாரத்திற்காக போதைப்பொருள் எடுத்துச் சென்ற 33 வயதுடைய நபர் ஒருவரை 10.150 கிராம் ஐஸ் உடன் கைது செய்துள்ளனர்.
அதேபோல், ஏறாவூர் பிரதேசத்தில் 15.660 கிராம் ஐஸ் உடன் வியாபாரி ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

இதனுடன், மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகில் கடலை விற்பனை செய்து வந்த கடுகன்னாவைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரை 140 மில்லிகிராம் ஹெரோயின் உடன் கைது செய்துள்ளனர்.
மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக விகாரையில் தங்கி, வீடுகளில் பணிபுரிந்து வந்த அல்பிட்டியைச் சேர்ந்த நபர் ஒருவரை 170 மில்லிகிராம் ஹெரோயின் உடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேலதிக விசாரணைகள் தொடருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.









