மட்டக்களப்பு நகரில் வீதியால் செல்வோரை தமது கடைக்கு வாருங்கள் என ஏட்டிக்கு போட்டியாக கூப்பிட்டு வரும் இரு ஆடைகள் விற்பனை வர்த்த நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு உள்ளாகி 3 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் தொடர்பாக ஒருவரை நேற்று வியாழக்கிழமை (16) கைது செய்துள்ளதுடன், இருவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது பற்றி தெரியவருவதாவது,
நகரில் கோட்டைமுனை பாலத்துக்கு அருகில் உள்ள அருகருகே அமைந்துள்ள இரு ஆடை விற்பனை வர்த்தக நிலையங்களில் முன்னால் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் வீதியால் போவோரை தனது கடைக்கு வருமாறு ஏட்டிக்கு போட்டியாக கூப்பிட்டு வந்தனர்.

இந்நிலையில் சம்பவ தினமான கடந்த புதன்கிழமை (15) பகல் வீதியால் போவோரை கூப்பிடும் போது இரு கடைகளில் பணிபுரிந்துவரும் ஊழியர்களுக்கும் இடையே வாய் தர்க்கம் ஏற்பட்டதையடுத்து கைகலப்பு ஏற்பட்டது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இதில் இரு பகுதியையும் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை ஒருவரை கைது செய்ததுடன் இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவரை இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.








