திருக்கோவில் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 127 மாணவர்களும், அவர்களுக்கு வழிகாட்டிய 40 ஆசிரியர்களும் நேற்று (16) திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் எஸ். சசிக்குமார் அவர்களால் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வு தம்பிலுவில் மத்திய கல்லூரியில், தவிசாளர் எஸ். சசிக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பேராசிரியர் எஸ். குணபாலன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் எஸ். கரன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
அத்துடன் உதவித் தவிசாளர் வரதராஜன், பிரதேச சபை உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிபர்கள், வங்கி முகாமையாளர்கள், மத போதகர்கள், தவிசாளர் சசிக்குமார் அவர்களின் துனைவியார் உள்ளிட்ட பலர் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் புலமைப்பரிசில் மாணவர்களுக்கு 5000 ரூபா வங்கியில் வைப்பிலிடப்பட்ட சேமிப்பு கணக்குப் புத்தகம், பரிசுப் பொருட்கள் என்பன வழங்கப்பட்டதுடன், ஆசிரியர்களும் பணப்பரிசிலுடன் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகள், தவிசாளர் சசிக்குமாரின் சமூகப்பணிகளை பாராட்டியதோடு, அவரது பிறந்த நாளையும் வாழ்த்துக்களுடன் கொண்டாடினர்.
இந்த நிகழ்வை தவிசாளர் சசிக்குமார் தன்னுடைய சொந்த நிதியில் ஏற்பாடு செய்ததோடு, மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் 5000 ரூபா தொகையையும் அவர் நேரடியாக வைப்பிலிட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செயற்பாட்டிற்கு திருக்கோவில் பிரதேச கல்விச் சமூகம் மற்றும் பொதுமக்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.















