ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் நேபாளம் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கவுள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் இருக்கும் குரூப்பில் பாகிஸ்தான் அணி ஏற்கனவே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. இந்த நிலையில் இந்தியா – நேபாளம் அணிகள் பாலக்கலேவில் நடக்கும் போட்டியில் இன்று மோதுகின்றன.
நேபாளம் அணிக்கு எதிராக இந்திய அணி முதல்முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற முடியும். அதேபோல் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டாலும் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறலாம். ஏற்கனவே இந்தியா – பாகிஸ்தான் போட்டி கைவிடப்பட்டதால் இந்திய அணிக்கு ஒரு புள்ளி கிடைத்துள்ளது.
நேபாளம் அணி கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் 238 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதனால் தோல்வியில் இருந்து மீண்டு வர முயற்சிக்கும். ஆசியக் கோப்பைக்கு தகுதிபெற்றுள்ளதால், அந்த அணியை அவ்வளவு எளிதாக கடந்து சென்றிட முடியாது. இந்திய அணிக்கு நிகரான அணியில்லை என்றாலும், 2018ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை சூப்பர் 4ல் ஆஃப்கானிஸ்தான் அணியை போல் அதிர்ச்சி கொடுக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் இந்திய அணி கவனமாக இருக்க வேண்டும்.
2018ஆம் ஆண்டு ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்திய – ஆஃப்கானிஸ்தான் போட்டி சமனில் முடிவடைந்தது. இந்தப் போட்டியை பொறுத்தவரையில் நட்சத்திர வீரர் பும்ரா சொந்த காரணங்களுக்காக மும்பை திரும்பி இருக்கிறார். இதனால் பும்ராவின் இடத்தில் முகமது ஷமி களமிறங்குவார் என்பது உறுதி. அதேபோல் கேஎல் ராகுல் இந்திய அணியுடன் இணைந்துள்ளார். ஆனால் கடந்த போட்டியில் இஷான் கிஷன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால், வாய்ப்புக்காக சில போட்டிகளில் காத்திருக்க வேண்டிய நிலை வரலாம். அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட உள்ளதால், திடீரென கேஎல் ராகுல் பிளேயிங் லெவனில் இடம்பெற்றாலும் ஆச்சரியமில்லை. இதனால் சுப்மன் கில்லுக்கு ஓய்வு வழங்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் தொடர்ந்து வெளிநாடுகளில் சுப்மன் கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மற்றபடி ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரில் எந்த மாற்றமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.