வைத்தியர்கள் போல உடையணிந்து புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றி, போலியான வைத்திய முத்திரையை வைத்திருந்த போலி வைத்தியர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (22) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள செம்மண் ஓடை பிரதேசத்தில் வைத்து மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை பொலிசாரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வைத்தியர் அணியும் உடையை அணிந்து தனிப்பட்ட தேவைகளுக்காக சென்றுவந்துள்ளார். இந்தநிலையில் அவர் தொடர்பில் சந்தேகம் எழுந்த அடிப்படையில் மட்டு போதனா வைத்தியசாலையினால் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரும் சட்டத்தரணியுமான வர்ண ஜயசுந்தரவின் ஆலோசனையில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலா ரத்னவின் வழிகாட்டலில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினரான (உபொப) கமகே, பொலிஸ் சார்ஜன் (37107) மஞ்சுள,பொலிஸ் சார்ஜன் (60873) அசேல, பொலிஸ் கொஸ்தாபல் (100828) தனோசன் ஆகியோர் சம்பவ தினமான இன்று குறித்த வைத்தியரின் செம்மண் ஓடையில் உள்ள அவரது வீட்டைசோதனையிட்டனர்.

இதன்போது குறித்த போலி வைத்தியரிடம் வைத்தியசாலை அனுமதி பத்திரம் மற்றும் வைத்தியர் அடையாள அட்டைகளை கேட்டு சோதனையில் ஈடுபட்ட போது அவர் எந்தவிதமான அனுமதி பத்திரமே,வைத்திய அடையாள அட்டையோ இல்லாமல், போலி வைத்திய முத்திரையை வைத்திருந்துள்ளார். இதன் போது மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் குறித்த நபர் தாதியம் பயின்ற சான்றிதல்களை வைத்திருந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த போலி வைத்தியரை கைது செய்ததுடன் அவர் வைத்திருந்த போலி வைத்திய முத்திரையை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மீட்டு வாழைச்சேனை பொலிஸில் ஒப்படைத்ததுடன், பின்னர் அவரை வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை நீதவான் அவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவிட்டார். அதேசமயம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








