உன்னிச்சை நீர் உள்ளெடுப்பகத்தில் நிறுவப்பட்டுள்ள ஒரு பம்ப் இயந்திரம் திடீரென செயலிழந்ததன் காரணமாக, மறு அறிவித்தல் வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மேற்கொள்ளப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதன் காரணமாக மட்டக்களப்பு, இருதயபுரம், கல்லடி, ஏறாவூர், காத்தான்குடி, செங்கலடி, ஆரையம்பதி, கொக்கட்டிச்சோலை, வாழைச்சேனை, களுவாஞ்சிகுடி, வவுணதீவு உள்ளிட்ட நீர் வழங்கல் திட்டப் பகுதிகளில் நீர் விநியோகத்தில் தற்காலிக பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மட்டக்களப்பு நீர்வழங்கல் அலுவலகத்தை இன்று (03) தொடர்புகொண்டு கேட்டபோது, பழுதடைந்த பம்ப் இயந்திரத்தை சீர்செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், பொதுமக்கள் இக்காலப்பகுதியில் தேவையான அளவில் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், நிலைமை சீராகும் வரை ஒத்துழைப்பு வழங்குமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, மட்டக்களப்பு கேட்டுக்கொண்டுள்ளது.








