நீர்ப்பாசனத் திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் கடுமையான முறைகேடுகள் குறித்து இலங்கை பாராளுமன்றத்தின் அரசாங்கக் கணக்குக் குழு (COPA) விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, அந்தத் திணைக்களத்தின் 41 அதிகாரிகள் ஓய்வுபெற்ற பின்னரும் 35 ஆண்டுகள் வரை தங்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்காமல் வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு COPA குழுத் தலைவர் கபீர் ஹசீம் பணிப்புரை வழங்கியுள்ளார். மேலும், திட்டமிடல் குறைபாடுகள் காரணமாக கைவிடப்பட்ட 11 நீர்ப்பாசனத் திட்டங்கள் மூலம் சுமார் 178.12 மில்லியன் ரூபாய் மக்கள் பணம் வீணாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சியம்பலாங்கமுவ ஓயா திட்டத்திற்கு 375 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டிருந்த போதிலும், கடந்த 13 ஆண்டுகளாக எந்தவித பயனும் கிடைக்காதது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஊழியர் பற்றாக்குறை காரணமாக பிராந்திய அலுவலகங்களின் கண்காணிப்பு பலவீனமடைந்துள்ளதாகவும், இதனால் முறைகேடுகள் அதிகரித்துள்ளதாகவும் COPA சுட்டிக்காட்டி, பொறுப்புடைய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.








