யாழ்ப்பாணத்தில் 15 வயதான பாடசாலை மாணவியொருவர் ஏழரை மாத கர்ப்பிணியாக இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு, பனிப்புலம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வயிற்று வலி காரணமாக மாணவி தனது தாயாரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர் ஏழரை மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த தாயார், மாணவியை இளவாலை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றதையடுத்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணைகளின் போது, தனது தாயாரின் சகோதரியின் மகனான ஒன்றுவிட்ட சகோதரனும், மற்றொரு நபரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக மாணவி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மாணவி வழங்கிய தகவலின் அடிப்படையில் 17 மற்றும் 20 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது மருத்துவ சிகிச்சைகளும், தேவையான பராமரிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், குழந்தை பிறந்த பின்னர் டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதன் அறிக்கையின் அடிப்படையில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரும் பரபரப்பையும், பெற்றோர்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.








