ஐக்கிய நாடுகள் சபையின் மோதல் தொடர்பான பாலியல் வன்முறை குறித்த வருடாந்திர அறிக்கையில், முதல் முறையாக இஸ்ரேல் மற்றும் ரஷ்ய பாதுகாப்புப் படைகள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இன்று (29) வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், மோதல் சூழல்களில் இடம்பெற்ற பாலியல் வன்முறை சம்பவங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா மற்றும் மேற்குக் கரை பகுதிகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு எதிராக இஸ்ரேலியப் படைகள் பாலியல் வன்முறைகள், கட்டாய நிர்வாணம், உடற்குழிச் சோதனைகள் மற்றும் பிற மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
மேலும், உக்ரைனில் உள்ள இராணுவ மற்றும் பொதுமக்கள் கைதிகளுக்கு எதிராக ரஷ்யப் படைகள் மேற்கொண்டதாகக் கூறப்படும் நூற்றுக்கணக்கான பாலியல் வன்முறைச் சம்பவங்களும் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனினும், இஸ்ரேலும் ரஷ்யாவும் இந்த குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ளன. ஐ.நா.வுக்கான இஸ்ரேலிய தூதர் டேனி டானன், இந்த அறிக்கையை “வெட்கக்கேடானதும் அபத்தமானதும்” என விமர்சித்துள்ளார்.
இந்த பட்டியலில் சூடான், ஹைட்டி, காங்கோ ஜனநாயகக் குடியரசு, மியான்மர், சிரியா மற்றும் மாலி உள்ளிட்ட பல நாடுகளும் இடம்பெற்றுள்ளன.








