உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரால் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
அநுராதபுரம் – புனித வெள்ளரசு மர விகாரை (ஜய ஸ்ரீ மகா போதி விகாரை) வளாகத்தில் வைத்து சம்பவம் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உடமலுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் சந்திர சுமிந்த ஹேவா பதினிகே மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் 2023 ஆகஸ்ட் 01 ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் கான்ஸ்டபிள் சம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிஸ் நிலைய அதிகாரிக்கு தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து சந்தேகநபர் இடமாற்றம் செய்யப்பட்ட போதிலும், குறுகிய காலத்திற்குள் மீண்டும் அதே நிலையத்திற்கே திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நேரத்திலிருந்து குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் பொலிஸார் நீண்ட கால தாமதம் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் 2024 டிசம்பர் 02 ஆம் திகதியே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபரை ஜூலை 07 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில், சம்பவம் தொடர்பான தொலைபேசி உரையாடல் பதிவுகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அவற்றை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் (Government Analyst) அனுப்பி பரிசோதனை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், வழக்கில் பொலிஸாரின் அசமந்தப் போக்கு குறித்து நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன், விசாரணைகளை விரைவுபடுத்துமாறும் அனுராதபுர மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.








