அங்கீகாரம் அல்லது தகுதிச் சான்றிதழ் இன்றி சாரதி பயிற்சிகளை நடத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதி பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர இதனைத் தெரிவித்துள்ளார்.
அவரின் கூற்றுப்படி, பல சாரதி பயிற்சி நிலையங்கள் உரிமம் பெற்றிருந்தாலும், அவற்றில் போதிய தகுதிச் சான்றிதழ் இல்லாத நபர்கள் மாணவர்களுக்கு நடைமுறைப் பயிற்சிகளை வழங்கும் நிலை காணப்படுகிறது.
இவ்வாறு தகுதியற்றவர்களிடம் பயிற்சி பெற்று சாரதி உரிமம் பெறும் இளைஞர்களே அதிகளவில் வீதி விபத்துகளில் சிக்குவதாகவும், குறிப்பாக வேகக் கட்டுப்பாடு, வீதி அடையாளங்கள் மற்றும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதில் காணப்படும் குறைபாடுகள் விபத்துகளுக்கான முக்கிய காரணங்களாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, சாரதி பயிற்றுவிப்பாளர் அங்கீகார முறைமையை வலுப்படுத்துவது தொடர்பாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் (RMV) விசேட கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும், எதிர்காலத்தில் சான்றளிக்கப்பட்ட தகுதியான பயிற்றுவிப்பாளர்கள் மட்டுமே சாரதி பயிற்சிகளை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.







