வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,342 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு தகவல் அமைச்சு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,470 ஆகவும், வீடுகளை இழந்தவர்களின் எண்ணிக்கை 17,345 ஆகவும் அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதனிடையே, வெனிசுலாவின் 215ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு உரையாற்றிய இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், நிலநடுக்கத்திற்குப் பின்னர் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை விளக்கினார்.
அரசாங்கம் அனர்த்தத்துக்கு தாமதமாகவும் போதியளவில் இல்லாத வகையிலும் பதிலளித்ததாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே பாதுகாப்புப் படைகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், எதிர்காலத்தில் அவசரநிலைகள் மற்றும் இயற்கை அனர்த்தங்களை விரைவாக எதிர்கொள்ளும் நோக்கில் புதிய இராணுவப் பிரிவு ஒன்றை அமைக்கவுள்ளதாகவும் இடைக்கால ஜனாதிபதி அறிவித்துள்ளார்.








