இலங்கையின் 2027ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் அடங்கிய உத்தியோகபூர்வ பட்டியல் அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்னவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமயங்களின் முக்கிய பண்டிகைகள் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தினங்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தமிழ் தைப்பொங்கல் ஜனவரி 15ஆம் திகதியும், சுதந்திர தினம் பெப்ரவரி 4ஆம் திகதியும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் திகதியும், மே தினம் மே 1ஆம் திகதியும், வைகாசி விசாகப் பூரணை தினம் மே 19ஆம் திகதியும், தீபாவளி ஒக்டோபர் 28ஆம் திகதியும், நத்தார் தினம் டிசம்பர் 25ஆம் திகதியும் அனுஷ்டிக்கப்படவுள்ளன.
மேலும், இலங்கையின் பாரம்பரிய நடைமுறைக்கு அமைவாக அனைத்து பூரணை தினங்களும் பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களாக அமையும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களின் பாரம்பரியங்களை மதிக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கிலும் இந்த விடுமுறைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.










