காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழக முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து அவர் பேசியதாகக் கூறி பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து தவெக மகளிரணியினர் அளித்த புகாரின் அடிப்படையில், உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளின் கீழ் தஞ்சாவூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்ற காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று மாலை அவரை கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர்.
முதலில் தஞ்சாவூர் தெற்கு நகர காவல் நிலையத்தில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அங்கு ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்டதால், பாதுகாப்பு காரணங்களுக்காக விசாரணை செங்கிப்பட்டி பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
ஆரம்பத்தில் அங்கு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த உதயநிதி, மூத்த திமுக நிர்வாகிகளான எ.வ. வேலு, கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திய பின்னர் விசாரணைக்கு சம்மதித்தார்.
மாலை 6.45 மணியளவில் தொடங்கிய விசாரணை இரவு 8.25 மணியளவில் நிறைவடைந்தது. பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி அவர் விடுவிக்கப்பட்டார். காவல் நிலையத்திற்கு வெளியே மழையிலும் காத்திருந்த திமுக தொண்டர்கள் மாலை அணிவித்து அவரை உற்சாகமாக வரவேற்றனர். அதன்பின் சாலை மார்க்கமாக திருச்சி சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.








