கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஸ்கார்ஃப் அணிந்து கடமையாற்றுவது தொடர்பில் சர்ச்சையில் சிக்கியுள்ள முஸ்லிம் பெண் ஊழியர்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மிப்ளால் மௌலவி வலியுறுத்தியுள்ளார்.
சாய்ந்தமருதில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறுவது உண்மையல்ல எனவும், பிரச்சினை இனிமேல்தான் தீவிரமாகும் எனவும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தில் உள்ள 9 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பட்டு, குறித்த பெண் ஊழியர்கள் தமது சீருடையுடன் ஸ்கார்ஃப் அணிந்து பணியாற்றுவதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியுமா எனவும் அவர் சவால் விடுத்தார்.
மேலும், சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிடுவதை விடுத்து, அரசாங்கம் தெளிவான நிர்வாக மற்றும் சட்ட ரீதியான தீர்வை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.







