தங்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இதுவரை தீர்வு வழங்காததை எதிர்த்து, இன்று (15) முதல் சனிக்கிழமைகளில் கடமைகளில் ஈடுபடுவதில்லை என இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
பயணக் கொடுப்பனவு அதிகரிப்பு, பட்டப்படிப்பை குறைந்தபட்ச கல்வித் தகுதியாக்குதல், அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளை வழங்குதல் மற்றும் சனி, அரச விடுமுறை நாட்களில் பணியாற்றுவதற்கான கொடுப்பனவு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் கடந்த 10 மற்றும் 11ஆம் திகதிகளில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும், அரசாங்கம் இதுவரை தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதிலை வழங்காததால், மறு அறிவித்தல் வரை சனிக்கிழமை அலுவலகப் பணிகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி, சனிக்கிழமைகளில் அலுவலகப் பணிகள் மற்றும் களப் பணிகளில் ஈடுபடாமல், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பிரிவு அலுவலகங்களில் கடமையாற்றவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.








