நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக, மலையகப் பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது.
மழை காரணமாக நீர்த்தேக்கங்களுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளதால், ஹட்டன் ஓயா, போடைஸ் ஓயா, காட்மோர் ஓயா, கெசல்கமு ஓயா மற்றும் மரே ஓயா உள்ளிட்ட ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதேவேளை, மோகினி எல்ல, காட்மோர், மரே, டெவன் மற்றும் சென் கிளையர் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளிலும் வழக்கத்தை விட அதிகளவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மவுசாக்கலை நீர்த்தேக்கம் முழுக் கொள்ளளவை எட்டுவதற்கு சுமார் 4 அடி மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், காசல்ரீ நீர்த்தேக்கம் முழுக் கொள்ளளவை அடைய சுமார் 2 அடி மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேல் கொத்மலை நீர்த்தேக்கம் ஏற்கனவே முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கென்யோன், பிராட்லண்ட், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல மற்றும் விமலசுரேந்திர உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வேகமாக அதிகரித்து வருகிறது.
நீர்த்தேக்கங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் நீர்மின் உற்பத்தி நிலையங்களிலும் அதிகளவு நீரைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








