தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் உள்ள, சமிட்புர சது என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் திமுத்து சதுரங்கவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், வெல்லம்பிட்டிய – சேதவத்தை பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்றை விசாரணை அதிகாரிகள் நேற்று (21) கைப்பற்றியுள்ளனர்.
28 வயதுடைய சந்தேகநபர், இலங்கையிலிருந்து தப்பிச் சென்று ஓமானில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு, கடந்த 18ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
இதனையடுத்து, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் அவர் தடுத்து வைக்கப்பட்டு, தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு முன்னரும் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரிவோல்வர் ஒன்றும் 12 ரவைகளும் மட்டக்குளி பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








