பழப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை பயிர்ச்செய்கையின் போது ஏற்படும் பல்வேறு அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையினால் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதன் கீழ், விவசாயத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட அன்னாசி, பப்பாளி, வாழை உள்ளிட்ட பழப் பயிர்களுக்கு விவசாயிகள் காப்புறுதி பெற்றுக்கொள்ள முடியும்.
காப்புறுதி செய்யப்படும் அடிப்படைத் தொகையில் 7 சதவீதத்திற்கு சமமான பிரீமியத் தொகையை செலுத்துவதன் மூலம் விவசாயிகள் இந்தக் காப்புறுதித் திட்டத்தில் இணைந்துகொள்ள முடியும்.

இயற்கை அனர்த்தங்கள், பயிர் நோய்கள், பூச்சிகள் மற்றும் தீங்குயிரிகளால் ஏற்படும் சேதங்கள் மட்டுமன்றி, காட்டு யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்களும் இந்தக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதன்படி, பயிர்களுக்கு சேதம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் ஒரு ஏக்கருக்கு 3 இலட்சம் ரூபாய் முதல் 4 இலட்சம் ரூபாய் வரையான இழப்பீட்டை விவசாயிகள் பெற்றுக்கொள்ள முடியும் என விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.
விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு அபாயங்களை நிர்வகிக்க உதவுவதுடன், பழப் பயிர்ச்செய்கையில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு அவர்களை ஊக்குவிப்பதும் இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என சபை தெரிவித்துள்ளது.








