கிளிநொச்சி, உருத்திரபுரம் – சிவநகர் பகுதியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வண்டியை தாத்தா பின்னோக்கி நகர்த்த முற்பட்ட வேளையில், குழந்தை எதிர்பாராதவிதமாக வண்டியை நோக்கி வந்தநிலையில், குழந்தை கெப் வண்டியின் சக்கரத்தினுள் சிக்குண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த குழந்தை உடனடியாகக் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்த குழந்தையின் சடலம் மீதான பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
மேலும், இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.







