மட்டக்களப்பு நகரில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் அறுத்து பறிக்க முயன்ற சம்பவம் நேற்று சனிக்கிழமை (05) இரவு இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைந்துள்ள ஆலய வீதியில் இரு பெண்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர், பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை அறுத்து பறிக்க முயன்றுள்ளார்.
எனினும், அவரது முயற்சி தோல்வியடைந்த நிலையில், குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளதுடன், தற்போது அந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.







