இந்த ஆண்டிற்குள் பல அதிவேக நெடுஞ்சாலைகளின் பணிகள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (08) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, இந்த ஆண்டின் நவம்பர் – டிசம்பர் மாதங்களுக்குள் குருநாகலிலிருந்து தம்புள்ளை வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் – கலேவெல பகுதிக்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதேபோன்று, கஹதுடுவையிலிருந்து இங்கிரிய வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளும் இந்த ஆண்டின் இறுதியில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கட்டுநாயக்கவிலிருந்து சிலாபம் வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் தொடர்பில் திட்டங்களைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். மேலும், அனுராதபுரத்தை மையமாகக் கொண்ட அதிவேக நெடுஞ்சாலை அமைப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கடவத்தையிலிருந்து மீரிகமை வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் 2028ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் நிறைவு செய்யப்படவுள்ளதாகவும், பொதுஹெரவிலிருந்து ரம்புக்கனை வரையிலான பகுதி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.








