தனியார் துறை ஊழியர்களுக்கான மாதாந்த ரயில் பருவகாலச் சீட்டுகளை (Season Tickets) இணையவழியில் பெற்றுக்கொள்ளும் புதிய வசதி, எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன் மூலம், தனியார் துறை ஊழியர்கள் ரயில் நிலையங்களுக்கு அடிக்கடி செல்லாமல், உத்தியோகபூர்வ இணையவழி ஆசன முன்பதிவுத் தளத்தின் ஊடாக வீட்டிலிருந்தே பருவகாலச் சீட்டுகளுக்கு விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள முடியும். புதிய முறையின் கீழ், பயணிகள் முதலில் தங்களது கணக்கு மற்றும் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த அடையாள உறுதிப்படுத்தலை, ஆசன முன்பதிவு வசதி கொண்ட எந்தவொரு ரயில் நிலையத்திலும் மேற்கொள்ள முடியும்.
முன்னதாக, இந்த இணையவழி பருவகாலச் சீட்டு வசதி அரசு துறை ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தனியார் துறை ஊழியர்களுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய டிஜிட்டல் சேவையின் உத்தியோகபூர்வத் தொடக்க நிகழ்வு இன்று (08) பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் விருந்தகத்தில் இடம்பெற்றது.
தற்போதைய நடைமுறையில், விண்ணப்பப் படிவம், புகைப்படம், வசிப்பிடச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டைப் பிரதி உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்துப் பருவகாலச் சீட்டைப் பெற வேண்டியிருந்ததுடன், குறிப்பிட்ட நாட்களிலும் நேரத்திலும் மட்டுமே சீட்டுகளைப் பெற முடிந்தமை குறிப்பிடத்தக்கது.







