கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள 15 மில்லியன் டொலர் நிதி உதவிக்கு அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக அமெரிக்கக் கூட்டாட்சி கடற்போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் லோரா டிபெல்லா தெரிவித்துள்ளார். இதற்கான காங்கிரஸ் அனுமதி எதிர்வரும் சில வாரங்களில் கிடைத்தவுடன், இந்த நிதி உதவி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
லோரா டிபெல்லா தலைமையிலான குழுவினருக்கும், மின்சக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்கவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடலின்போதே இத்தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கூட்டாட்சி கடற்போக்குவரத்து ஆணைக்குழுவின் ஆணையாளர் ரொபர்ட் ஹார்வி மற்றும் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் துறைமுக நடவடிக்கைகளின் திறனை அதிகரிப்பதோடு, கப்பல்கள் துறைமுகத்தில் தங்கியிருக்கும் நேரத்தைக் குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்கக் குழுவினர் தெரிவித்துள்ளனர். கொழும்புத் துறைமுகம் இலங்கைக்கு மட்டுமன்றி, அமெரிக்காவுடன் தொடர்புடைய சரக்குக் கப்பல் போக்குவரத்திற்கும் ஒரு முக்கிய மையமாக விளங்குவதால், அதன் வளர்ச்சிக்குத் தேவையான அதிகபட்ச ஆதரவை வழங்கத் தயாராக உள்ளதாகவும் அக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் அனுர கருணாதிலக்க, கொழும்புத் துறைமுகத்தின் செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பது, டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்துவது மற்றும் எதிர்காலத் துறைமுக வளர்ச்சிப் பணிகளுக்கு சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார். மேலும், இலங்கையின் கடல்சார் துறையை மேலும் வலுப்படுத்துவதற்காக ‘Merchant Shipping Secretariat’ நிறுவனத்தை மிகவும் சக்திவாய்ந்த அதிகாரசபையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்புத் துறைமுகத்தின் இரண்டாவது மேற்கு முனையத்தை (WCT-2) அபிவிருத்தி செய்வதற்கு அலைத்தடுப்பு அமைப்பை (Breakwater system) விரிவாக்குவது அத்தியாவசியமானது என்பதால், அதற்காக நிதி நிறுவனங்களின் ஆதரவைப் பெற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்கக் கூட்டாட்சி கடற்போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் லோரா டிபெல்லா, செப்டெம்பர் 9 முதல் 11 வரை நடைபெறவுள்ள 8ஆவது கொழும்பு சர்வதேச கடற்போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் மாநாட்டில் உரையாற்றவுள்ளதுடன், ஆணையாளர் ரொபர்ட் ஹார்வி அதன் கலந்துரையாடல் குழு உறுப்பினராகப் பங்கேற்கவுள்ளார்.








