மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் சட்டவிரோதமாக T-56 ரக துப்பாக்கி மற்றும் 30 உயிருள்ள தோட்டாக்களை வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை, பேத்தாளை பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா பாக்கியராஜா அல்லது தேவமணி பாக்கியராஜா என்பவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் திகதி வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை பகுதியில் வைத்து குறித்த நபர் T-56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான 30 உயிருள்ள தோட்டாக்களும் வைத்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தமை மற்றும் உயிருள்ள 30 தோட்டாக்களை உடமையில் வைத்திருந்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கு விசாரணைகளின்போது எதிராளி சார்பில் சட்டத்தரணி பிரகாஷ் ஆஜராகியதுடன், பொலிஸ் தரப்பில் அரச சட்டவாதி எஸ். அனுஷன் ஆஜராகி வாதாடினார்.
நீண்டகாலமாக இடம்பெற்று வந்த வழக்கின் விசாரணையின் முடிவில், கடந்த மாதம் 24ஆம் திகதி குறித்த நபர் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டது.
இதனையடுத்து, தண்டனை தொடர்பான தீர்ப்பு கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. அதன்படி, சட்டவிரோதமாக T-56 ரக துப்பாக்கியை வைத்திருந்தமைக்காக ஆயுள் தண்டனையும், 30 உயிருள்ள தோட்டாக்களை வைத்திருந்த குற்றத்திற்காக 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மூன்று மாதங்கள் சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் தீர்ப்பளித்தார்.







