சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21) பிற்பகல் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், அனோஜன் தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் இனிவரும் காலங்களில் முன்னெடுக்கக்கூடிய சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
குறித்த இளைஞரின் உயிரைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், சவூதி அரேபியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தேவையான இராஜதந்திரத் தலையீடுகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், இந்த விவகாரத்தில் எதிர்கால நடவடிக்கைகளை தொடர்ச்சியாக ஒருங்கிணைத்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி தொடர்பில் அரசாங்கம் வழங்கும் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக முன்னெடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையில் நெருக்கமான ஒருங்கிணைப்பு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கலந்துரையாடலில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதனுடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகளும் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.







