வவுணதீவு பிரதேசத்தில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவருடன் சேர்ந்து மதுபானம் அருந்திய வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வரும் பொலிஸ் கொஸ்தாப்பர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை (01) இருந்து பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பொலிஸ் கொஸ்தாப்பர் ஒருவர் சம்பவ தினமான கடந்த 29 திகதி செவ்வாய்க்கிழமை இரவு கன்னங்குடா பகுதியைச் சேர்ந்த இருவருடன் இணைந்து மதுபானம் அருந்தியுள்ளார்.
இந்த நிலையில் கு.ஜனுஷன் மற்றும் அ.யோகேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து இருவரும் மாறி மாறி தாக்கியதில் இருவரும் பலத்த காயமடைந்ததையடுத்து இருவரையும் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த இருவருடனும் பொலிஸ் கொஸ்தாப்பர் இணைந்து மதுபானம் அருந்தியுள்ளதாகவும் குறித்த இருவருக்கும் இடையே சண்டை இடம்பெற்றபோது பொலிஸ் கொஸ்தாப்பர் மதுபோதையில் இருந்துள்ளார் எனவும் குறித்த இருவரும் கசிப்பு வியாபாரம் மற்றும் போதைப்பொருள் வியாபாரம், கொள்ளை போன்ற பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த பொலிஸ் கொஸ்தாப்பர் குற்ற செயல்களுடன் தொடர்புபட்டவர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்திய குற்றத்தினையடுத்து அவரை நேற்று வியாழக்கிழமையில் இருந்து பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்








